கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28464 விவசாயிகளுக்கு ரூ.231.14 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28464 விவசாயிகளுக்கு ரூ.231.14 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 25 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கிப் பேசியதாவது:

தமிழக அரசு வேளாண், தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும். தற்போது, தமிழக முதல்வர் பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்து சான்றிதழ்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 1,350 விவசாயிகளுக்கு ரூ.8.39 கோடி, வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 1,580 விவசாயிகளுக்கு ரூ.11.14 கோடி, பர்கூர் ஒன்றியத்தில் 3,762 விவசாயிகளுக்கு ரூ.29.55 கோடி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 4,319 விவசாயிகளுக்கு ரூ.31.17 கோடி, மத்தூர் ஒன்றியத்தில் 2,587 விவசாயிகளுக்கு ரூ.20.91 கோடி, ஊத்தங்கரை ஒன்றியத்தில் 5,228 விவசாயிகளுக்கு ரூ.45.79 கோடி மதிப்பீட்டிலான பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

ஓசூர் ஒன்றியத்தில் 1,553 விவசாயிகளுக்கு ரூ.13.90 கோடி, சூளகிரி ஒன்றியத்தில் 2,548 விவசாயிகளுக்கு ரூ.24.26 கோடி, கெலமங்கலம் ஒன்றியத்தில் 2,633 விவசாயிகளுக்கு ரூ.22.03 கோடி, தளி ஒன்றியத்தில் 2,904 விவசாயிகளுக்கு ரூ.24 கோடி என மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 28,464 விவசாயிகளுக்கு ரூ.231.14 கோடி மதிப்பீட்டிலான பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்றி தழ்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்தானம், சரக துணைப்பதிவாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்