சட்டப்பேரவை தேர்தலின் போது, கர்நாடக மாநிலத்திலிருந்து பரிசல்கள் மூலம் மதுபானங்கள் கடத்துவதை தடுக்க கண்காணிப்பினை தீவிரப்படுத்திட வேண்டும் என ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தேர்தல் செலவு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும், கண்காணிப்பு மேற்கொள்ளவும் ஆலோசனை நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா தலைமை வகித்துப் பேசியதாவது:
தருமபுரி மாவட்ட எல்லையில் இருந்து சாலை வழியாக பென்னா கரம் வட்டத்தில் வரும் வாகனங்கள் ஊட்டமலை கிராமத்தில் ஏற்கெனவே உள்ள காவல்துறை சோதனைச் சாவடி மூலம் தீவிரமாக கண்காணிப்பு செய்ய மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநில பகுதியிலிருந்து பரிசல்கள் மூலம் மதுபானங்கள் கடத்தப்படாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மதுபானக் கடைகள் இயங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு மதுபானங்களை சட்ட விரோதமாக பெட்டிக்கடைகள் மற்றும் சந்துக் கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுபானம் வைத்திருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என தொடர் புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் பிரதாப், உதவி ஆணையர் (ஆயம்) தணிகாசலம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கேசவன், மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ராஜாசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago