திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக, திருவண் ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் நேற்று மாலை தண்ணீரை திறந்துவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள சாத்தனூர் அணை யின் நீர்மட்டம் 119 அடியாகும். அணையில் நேற்று காலை நிலவரப்படி, 111.65 அடியில், 5,754 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 110 அடியை தண்ணீர் எட்டியபோது, பாசனத்துக்காக தண்ணீரை திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி, சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில் இருந்து இடது மற்றும் வலது புறக்கால்வாய் மூலமாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரை ஆட்சியர்கள் சந்தீப் நந்தூரி (திருவண்ணாமலை), கிரண் குராலா (கள்ளக்குறிச்சி) ஆகி யோர் திறந்துவிட்டனர்.
பின்னர் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும் போது, “சாத்தனூர் அணையில் 5,754 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் திட்டம் மற்றும் நீர் ஆவியாதல் உள்ளிட்டவைகளுக்காக 1,705.06 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவை. பாசனத்துக்காக 2,848.94 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சாத்தனூர் அணையின் பாசன நிலங்கள் 33 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இவை பயன்பெற இடதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 270 கனஅடி தண்ணீரும், வலதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் என வரும் மே மாதம் 26-ம் தேதி வரை 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேலும், திருக்கோவிலூர் அணைக்கட்டின் பழைய ஆயக் கட்டுக்காக 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தின் இரண்டாம் போக சாகுபடிக்காக 1,200 மில்லியன் கனஅடி தண்ணீர் மார்ச் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இடைவெளிவிட்டு மூன்று தவணைகளாக தண்ணீர் திறந்துவிடப்படும்.
முதல் 30 நாட்களுக்கு கடைமடை ஏரிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப்படும். பாசன நீரை சிக்கனமாக பயன் படுத்தி நல்ல விளைச்சல் பெறவும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்கப்படாது” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago