சட்டப்பேரவை கலைப்புக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு வெளியானது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சட்டப்பேரவை கலைப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியமைத்தது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். அதனால், அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார்.

இச்சூழலில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோதல் வலுத்து, பல நலத்திட்டங்கள் முடங்கின.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். இதற்கிடையில் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நாராயணசாமி புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளும் காங்கிரஸில் 5 எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியான திமுகவில் ஒரு எம்எல்ஏ அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.

துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவுப்படி சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதையடுத்து, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டப்பேரவையை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தக் கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

“புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் இருந்து கடந்த 22-ம் தேதி கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது" என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு நேற்று பிரதமர் மோடி வந்திருந்தார். அவர், புதுச்சேரியில் அரசு நிகழ்வு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று சென்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்