சிந்தகம்பள்ளியில் எருது விடும் விழா

சிந்தகம்பள்ளியில் நடந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் 4-ம் ஆண்டு எருதுவிடும் திருவிழா நடந்தது. பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன், பர்கூர் வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கூத்தரசன் ஆகியோர் தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்தனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து சுமார் 300 காளைகள் பங்கேற்றன.

வாடிவாசல் வழியாக ஒவ் வொரு காளைகளாக ஓட விட்டனர். காளைகள் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் நேரத்தை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டனர். பின்னர், இவ்வாறு ஓடவிடப்பட்ட காளைகளில் குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவரது காளை முதல் பரிசான ரூ. 66,666-ஐ தட்டி சென்றது.

மொத்தம் 30 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டது. விழாவைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE