பாம்பாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு 4000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி

By செய்திப்பிரிவு

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு நீர்த்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 19.68 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, பாம்பாறு அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று பாம்பாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரிய பெருமாள்வலசை உட்பட 12 கிராமங்களில் 2501 ஏக்கர் விளை நிலங்களும், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தா.அம்மாபேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம் பாடி, ஆண்டியூர் ஆகிய கிராமங்களில் 1499 ஏக்கர் விளைநிலங்கள் என மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் பொதுப்பணித் துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்வில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) குமார், வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், வட்டாட்சியர் ஆஞ்சநேயலு, ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்