மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தண்டரை மனோகரன் தலைமையிலான அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது.
இதேபோல், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையிலான அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையிலும், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் டிகேஎம்.சின்னையா தலைமையிலும் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோயில், மார்கெட், காந்தி சாலை உட்பட பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில், அதிமுக மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மக்களவை உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த தினத்தை நேற்று அதிமுக மற்றும் அமமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பாடல்கள், ஜெயலலிதா புகழ்பாடும் பாடல்கள் ஒலித்த வண்ணம் நடந்த கொண்டாட்டத்தில், அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், பொதுக் கூட்டங்களை அதிமுகவினர் நடத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு, கிழக்கு, மத்திய, தெற்கு, வடக்கு மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago