தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வி.ஏ.ஓ. பதவி உயர்வு காலத்தை, 10 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வண்டலூர் வட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் தில்லை கோவிந்தன், செயலாளர் எத்திராஜ், பொருளாளர் சிவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த் துறையில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கிராம உதவியாளர் சங்கத்தினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago