தேர்தலையொட்டி மதுபானக் கடத்தலை தடுக்க 3 மாநில எல்லைகளில் தீவிர வாகனத் தணிக்கை கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலின் போது மதுபான கடத்தலை தடுக்கும் வகையில், 3 மாநில அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆலோசனை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட எல்லையோர மாநிலங்களான கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் எல்லையோர சோதனைச் சாவடிகளை பலப்படுத்துவது மற்றும் கூடுதலாக தேவைப்படுகின்ற இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மது கடத்தல் தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளிலும், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு சோதனைச் சாவடிகளிலும், கர்நாடக, ஆந்திர ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்திட வேண்டும்.

மேலும், 3 மாநில எல்லையோர வனப்பகுதிகள் வழியாக மதுபானங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். மாநில எல்லையோரம் அமைந்துள்ள மதுபானக் கடைகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தேர்தல் அட்டவணை வெளியானவுடன், சோதனைச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 3 மாநிலங்களிலும் மது பானக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், அந்தந்த மாநில எல்லையோரக் காவல் அலுவலர்கள் கூட்டாக ஒருங்கிணைந்த மதுபானக் குற்றங்களை தடுப்பதற்கு, விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினா்.

கூட்டத்தில், கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி கற்பகவள்ளி, ஓசூர் குணசேகரன், உதவி ஆணையர் (ஆயம்) ரவிச்சந்திரன், மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு டிஎஸ்பி சங்கர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் புஷ்பலதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிருஷ்ணகிரி வெங்கடேசன், ஓசூர் ஈஸ்வரமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் ஜெய்சங்கர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட துணை ஆணையர் (கலால்) ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்