சேலம் மாநகராட்சிப் பகுதிகளில், பொது இடங்களில் சுகாதாரக்கேடு விளைவிப்பவர்கள், நெகிழி விற்பனையில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோரிடம் உடனுக்குடன் அபராதம் வசூலித்திட, மாநகராட்சி ஊழியர்களுக்கு மின்னணு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் காலிமனைகள், சாலையோரங்கள், கழிவு நீர் வடிகால்கள் உட்பட பொது இடங்களில் அசுத்தம் செய்தல், குப்பை கொட்டுதல், வீடுகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக தூய்மைப் பணியாளர்களிடம் வழங்காமல் இருத்தல், பிளாஸ்டிக், டயர் மற்றும் குப்பையை திறந்த வெளியில் எரித்து காற்று மாசு ஏற்படுத்துதல், கட்டுமானக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்துதல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான செயல்களில் ஈடுபடும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு ரூ.50 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் வணிக, தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அபராத தொகையினை உடனடியாக உரியவர்களிடம் முறையாக வசூலிக்க சேலம் மாநகராட்சிக்கு தனியார் வங்கி சார்பில் அபராதம் விதிக்கும் மின்னணு இயந்திரங்கள் 20 வழங்கப்பட்டன. மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட 20 அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மின்னணு இயந்திரங்களை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago