மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலை, படங்களுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பொன்மலைப்பட்டி, திருவெறும்பூர், லால்குடி ஆகிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பொன்மலை அன்பகம் ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவும், அரியமங்கலம், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
லால்குடியில் 73 கிலோ கேக் வெட்டப்பட்டு கட்சியினர், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 3 தொகுதிகளிலும் சேர்த்து 1,000 பேருக்கு இலவச சேலை வழங்கப்பட்டதுடன், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், பகுதிச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் ராவணன், அசோகன், நடேசன், கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் அருண் நேரு, ராஜா மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, ரங்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் வீல்சேர், கட்டில் ஆகியவற்றையும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களையும் வழங்கினார்.
மேலும், வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட ரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய தொகுதிகளில் பல்வேறு இடங்களில் மு.பரஞ்ஜோதி தலைமையில் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மணப்பாறை பேருந்து பணிமனையில் ஆர்.சந்திரசேகரன் எம்எல்ஏ, கட்சிக் கொடியேற்றிவைத்து, இனிப்புகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர், அரியலூர் நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று, கட்சிக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக, அரியலூர் செட்டிஏரிக்கரை பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார், கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஓ.பி.சங்கர், அரியலூர் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பாஸ்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் சாந்தி, அதிமுக நகரச் செயலாளர் பி.செந்தில், அவைத் தலைவர் கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன்(வ), செல்வராஜ்(தெ) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் கட்சியினருடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago