தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

தென்னிந்தியாவில் 14 புலிகள்காப்பகங்கள் உட்பட நாடு முழுவதும் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இந்த புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநில முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர்கள் அளவிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சத்தியபிரகாஷ் யாதவ் தலைமையில் உதகையில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் 24 வனத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையஉத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணியின்போது துல்லியமாக புலிகளை கணக்கெடுப்பது குறித்தும் அதற்காக பயன்படுத்த வேண்டிய தொழில் நுட்ப வசதிகள் குறித்தும், இனி வரும் காலங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வனப் பகுதிகளில் செய்ய வேண்டிய மேலாண்மை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் நாளை கள ஆய்வில் ஈடுபடுவதுடன், ட்ரோன் கேமரா மூலம் வனப் பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்வது குறித்து சோதனை செய்ய உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE