கந்தசுவாமி, காமாட்சியம்மன் கோயில்களில் தேரோட்டம் மாவட்ட ஆட்சியர் உட்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

By செய்திப்பிரிவு

திருப்போரூர் கந்தசுவாமி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்களில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நடைபெற்ற தேரோட்ட உற்சவத்தில் மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசிமாத பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று தேரோட்ட உற்சவம் நடைபெற்றது.

இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசுவாமி திருத்தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடுகளை செய்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், கோட்டாட்சியர் செல்வம், கோயில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா, அரோகரா' என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர், 4 மாடவீதிகளை வலம் வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தேரோட்ட உற்சவத்தில் எஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. உற்சவர் காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் 4 ராஜவீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகலில் நிலைக்கு வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்