காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும்9 மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்துக்கு மாவட்டபொருளாளர் பி.பி.பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், சித்தாமூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டில் நடைபெற்ற போராட்டத்தில் தாட்சாயினி, அருள்பிரகாஷ், சற்குணம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒருங்கிணைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago