புதுச்சேரியில் புதிதாக 28 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 1,632 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், வம்பாக்கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 42 வயது ஆண் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தோர் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 628 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 45 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 48 பேரும் என மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 114 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 65 பேர் என மொத்தம் 179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
21 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 784 (97.86 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்து 584 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 472 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும் மருத்துவ பணியாளர்கள் 8,908 பேர் (24 நாட்களில்), முன்களப் பணியாளர்கள் 444 பேர் (13 நாட்களில்) என மொத்தம் 9,352 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புதுவை சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago