எம்எல்ஏக்களே அரசை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு, பதவி விலகியதாலேயே இந்த ஆட்சி கலைந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் நியமன எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத்தால் தொழில்கள் முடங்கியும், முக்கிய ஆலைகள் மூடப்பட்டும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. தேர்தல் வாக்குறுதியை ஒரு சதவீதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அவர்களது எம்எல்ஏக்களே அரசை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு பதவி விலகியதால் இந்த ஆட்சி கலைந்தது.
ஆனால், நாராயணசாமி பாஜக மீது பழிபோடுகிறார். இந்த ஆட்சி கவிழ்ந்ததற்கு ஒரு சதவீதம் கூட பாஜக காரணமில்லை. புதுச்சேரியில் பலமுறை காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை செய்துள்ளது. இப்போது அவர்கள் மீது நம்பிக்கையிழந்து தாமாகவே கவிழ்ந்துள்ளது.
ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் பாஜக, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமைக்கோர வாய்ப்பே இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையாக மக்களைச் சந்தித்து, காங்கிரஸ் அரசின் அவல நிலையை எடுத்துச் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
மத்திய பாஜக அரசு அமைச்சர்களை, எம்எல்ஏக்களை மிரட்டியதாகவும், வருமான வரித்துறையை விட்டு வழக்கு போடுவதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அப்படியெனில், கடந்த மூன்று ஆண்டுகளில் நாராயணசாமி, அவரது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஏதேனும் வருமான வரித்துறை வழக்கு போட்டுள்ளதா? இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார்.
சட்டப் பேரவையில் பாஜக நியமன உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்பே நடைபெறாத நிலையில் வெளியேறிய நாராயணசாமி எங்கள் மீது குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
பேட்டியின்போது நியமன எம்எல்ஏக்கள் தங்கவிக்ரமன், செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago