ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த 19, 20-ம் தேதிகளில் விநாடிக்கு 300 கனஅடியாகவும், 21, 22-ம் தேதிகளில் விநாடிக்கு 250 கன அடியாகவும் நீர்வரத்து இருந்தது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் விழும் தண்ணீரின் அளவும் குறைந்திருந்தது. நீர்வரத்து குறைவால் கோடைகால ஒகேனக்கல் சுற்றுலா முழுமையாக பாதிப்படையலாம் என்ற அச்சத்தில் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேதனைக்கு உள்ளாகினர். அதேபோல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதிலும் பல்வேறு சவால்கள் ஏற்படும் நிலை உருவானது.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 2000 கன அடி என்ற அளவுக்கு நீர்வரத்து உயர்ந்திருந்தது. இதனால், ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து தண்ணீர் சலசலத்து ஓடத் தொடங்கியது. பிரதான அருவியில் விழும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. இதுதவிர, இதர பாறை பகுதிகளில் இருந்து வெள்ளி உருகியது போல தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. எனவே, நேற்று ஒகேனக்கல் சுற்றுலா வந்தவர்கள் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல, ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கும், நீர்வரத்து உயர்வு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

‘கோடை காலம் முடியும் வரை விநாடிக்கு 2,000 கனஅடிக்கும் கீழே நீர்வரத்து குறையாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒகேனக்கல் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்