மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சாந்தி, செயலர் ஸ்டெல்லா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "காலமுறை ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களாக்குதல், குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

பின்னர், தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 640 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சங்க மாநிலத் துணைத் தலைவர் பாக்கியம், மாவட்டச் செயலர் எல்லம்மாள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியிலேயே இரவு நேரத்தில் தங்கி, சமையல் செய்து போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்ததால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உதகை

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நீலகிரி மாவட்டத் தலைவர் சசிகலா தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 565 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்