காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வருவாய் துறை அலுவலர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 6-வது நாளாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1300-ஐ வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவியல் பயிற்சி வழங்க வேண்டும், மாவட்டங்களில் அதிக அளவு காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மாசால்சி, பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஓரிரு கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டாலும் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தை நேற்று 6-வது நாளாக தொடர்ந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் த.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலர் கே.ராஜ்குமார், பொருளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்களின் போராட்டம் காரணமாக வருவாய் துறையில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுகுமார், நிர்வாகிகள் பிரபாகரன், பிரகாஷ், விக்டர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்திலும் வருவாய் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்