பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு, நகரச் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் குறைக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலரும் ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தாம்பரம் நகர செயலர் எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, திண்டுக்கல் ஐ.லியோனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் 3 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன முழக்கமிட்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு, மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர் சுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்