செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் குன்னவாக்கம் கிராமத்தில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது.
மேற்கண்ட குவாரியில் பாறைகளை வெடி வைத்து உடைக்கும்போது எழும் வெடிச்சத்தம் மற்றும் அதன் அதிர்ச்சியால் குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுகிறது, பாறைத் துகள் படிவதால் விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடிவதில்லை எனக் கூறி கருமாரப்பாக்கம், குன்னவாக்கம், வீராபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தக் கல் குவாரியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல்அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே வெடி வைக்க வேண்டும் என கல் குவாரிக்கு அதிகாரிகள் கட்டாய கட்டுபாடு விதிக்க வேண்டும் மற்றும் மாலை 6 மணிக்கு மேல் குவாரி இயங்க அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago