சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம், சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய பெருந்தொழில் மற்றும் பொது முனைவகத் துறை அமைச்சகம் 2020-21-ம் ஆண்டில் கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டங்களில் ‘நல்வாழ்வு மற்றும் ஊட்டச்சத்துக்கு’ முக்கியத்துவம் வழங்க அறிவுறுத்தியுள்ளது.

இதன்பேரில், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கூவத்தூர், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரியப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில், முகக் கவசம், (ஆக்சிஜன் மற்றும் நெப்யூலைசர்) முகமூடி, தொற்று நீக்கி தெளிப்பான், சானிடைசர், ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை நிலைய இயக்குநர் எம்.னிவாஸ் அரசு மருத்துவர்களிடம் வழங்கினார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் ஜெனரேட்டர், எக்ஸ்-ரே கருவி, ப்ரீஸர், ஒருங்கிணைந்த ஆக்சிஜன் சிஸ்டம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிலைய இயக்குநர் தகவல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சமூக பொறுப்புக் குழுத் தலைவர் கே.வி.கிருஷ்ணமூர்த்தி, மனிதவள துணை பொதுமேலாளர் டி.வி.மாலதி கோபால், உறுப்பினர் - செயலர் என்.சீனிவாசன் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்