குடிநீர் குழாய் வால்வு சேதம்; நீரூற்று போல் வெளியேறிய நீர்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் வால்வு உடைந்து நீரூற்று போல் தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலக்கோட்டில், புற வழிச் சாலையில் அரசு மருத்துவமனை பகுதியில் நேற்று சாலையோரம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 20 அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் மேலெழும்பி நீரூற்று போல் ஆர்பரிக்கத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் குடிநீர் திட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட குழாயில் செல்லும் தண்ணீரை நிறுத்தியதால் சுமார் அரை மணி நேரத்துக்குள் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலக்கோட்டில் 24-ம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக சாலை யோரங்களில் கடைகள் அமைக்க வசதியாக பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணி நடந்துள்ளது. இந்த பணி யின் போது, அவ்வழியே செல்லும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் பொருத்தியுள்ள வால்வு ஒன்றை கவனிக்காமல் பொக்லைனை இயக்கியதால் அது சேதமடைந் துள்ளது. அந்த நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை அந்த குழாய் வழியாக குடிநீர் அனுப்பும் பணி நடந்து கொண்டிருந்ததால் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற தொடங்கியது. தகவல் அறிந்ததும், அந்தக் குழாயில் தண்ணீர் அனுப்பும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. நாளைக் குள் வால்வு சீர்செய்யப்படும். பின்னர், குடிநீர் மூலம் தொற்று பரவலை தடுக்கும் வகையில் குழாய்க்குள் இருக்கும் நீரை முழுமையாக வெளியேற்றி விட்டு பின்னர் குடிநீர் விநியோகம் தொடங்கப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்