அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

By செய்திப்பிரிவு

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் பழைய நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

மாநிலத் துணைத் தலைவர் சரோஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரேமா, மாவட்ட பொருளாளர் மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாநிலத் துணைத் தலைவர் சரோஜா கூறியதாவது:

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக் கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சேலம் மாவட்டம் முழுவதும் 2,630 அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரத்து 700 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணகி தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் ராதாமணி தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சாந்தி, பொருளாளர் அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நடந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்