நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், பணியாளர்களுடன் எம்எல்ஏ நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள மருதா நல்லூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை மருதாநல்லூர் நேரடி நெல் கொள் முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டுவந்து, குவியல் குவியலாக குவித்து வைத்திருந்தனர்.
ஆனால், நேற்று காலை நெல் கொள்முதல் பணிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், கும்பகோணம் பகுதியில் நேற்று லேசான மழை பெய்ததால், கொள்முதல் நிலையத்தைச் சுற்றிலும் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் நனையத் தொடங்கின.
இதனால் ஆத்திர மடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உடனடியாக அங்கு சென்று, கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ, கொள்முதல் பணி தொடங்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி அங்கேயே நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒரு மணிநேரத்துக்குப் பிறகு கொள்முதல் பணிகள் தொடங்கியபிறகே, அவர் அங்கிருந்து சென்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago