தி.மலையில் குடியிருப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உயர் ரக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப் பட்டதை கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை நகரம் வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகத்தில் உயர் ரக டாஸ்மாக் மதுபான விற்பனை(எலைட்) கடை திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக செயல்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “வணிக வளாகத்தில்டாஸ்மாக் மதுபான கடை (எலைட்) திறக்கும்போது, காவல் துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுபானக் கடையால் எங்கள் பகுதி பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே, மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், ‘‘இப்பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதிக்கமாட்டோம், எங்களது வேண்டுகோளை ஏற்று கலைந்து செல்லுங்கள்’’ என காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. பொதுமக்களின் சாலை மறியல் எதிரொலியாக நேற்று மதுபானக் கடை திறக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago