ஒன்றிய குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் மற்றும் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 7 கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கடந்த ஒராண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக மற்றும் திமுக கூட்டணி சம பலத்துடன் இருப்ப தால், ஒன்றியக் குழு தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக, பலமுறை தேர்தல் அறிவிப்பு வெளியிட்டும் பலனில்லை.
இந்நிலையில், நிதி ஒதுக்காததால் மக்கள் பணி செய்ய முடியவில்லை எனக் கூறி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாமகவைச் சேர்ந்த சுமதி ஆறுமுகம், வள்ளியம்மாள் கோவிந்தசாமி, ஏழுமலை, முருகன் மற்றும் சுயேட்சைகள் ராஜகுமாரி, பாபு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பார்வதி கோபாலகிருஷ்ணன் ஆகிய 7 கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இதுவரை, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட நாங்கள், எங்களது பகுதிக்கு நலத்திட்ட பணிகளை செய்ய முடியவில்லை. எங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மக்கள் நல பணிகள் அடியோடு முடங்கி கிடக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் ஒரு சில பணிகளை செய்யும் போது, நீங்கள் ஏன் செய்வது இல்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும்” என்றனர்.
உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டு ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர், உங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago