திருப்பூரில் பொதுமக்களின் குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

By செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு, மத்திய மாவட்ட திமுக சார்பில் அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களை சந்திக்கும் வகையில், திருப்பூர் - காங்கயம் சாலை பள்ளக்காட்டுபுதூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக்கொண்டு, சில புகார்களை படித்து இடையிடையே மக்களோடுதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார். முதல் புகாராக திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த எஸ்.திவ்யா என்ற திருநங்கை, திருப்பூரில் திருநங்கைகளுக்கு குடியிருப்பு வசதிகளை செய்துதர கோரியிருந்தார். புகாருக்கு பதிலளித்த ஸ்டாலின், திமுக ஆட்சியில் திருநங்கைகளுக்கான வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் அவிநாசி தொகுதியைச் சேர்ந்த பி.மனோகரன், தனது நிலத்தை அதிமுக கவுன்சிலர் ஒருவர் அபகரித்து கொண்டதாக தெரிவித்திருந்தார். திமுக உங்களோடு உள்ளது. நிலம் நிச்சயம் மீட்டுத் தரப்படும். திருப்பூர் தெற்கு சுகுமார் நகரை சேர்ந்த பாத்திமா என்பவர், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக தனது வீட்டை இடித்துவிட்டதாகவும், தற்போது தெருவில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஊழல் திட்டத்துக்கு ஸ்மார்ட் சிட்டி என பெயர் வைத்துள்ளனர். எந்த திட்டமானாலும் மக்களை பாதிக்காத வகையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல பல்லடம் வட்டம் பொங்கலூர் அருகே கேத்தனூரை சேர்ந்த கே.சிவக்குமார், அத்திக்கடவு குடிநீர் திருட்டு குறித்தும், திருப்பூர் தெற்கு தொகுதியை சேர்ந்த என்.மணிகண்டன் என்பவர்மகனின் விளையாட்டு மேம்பாட்டுக்கு உதவக் கோரியும், ஆர்.சபரீசன் என்பவர் மின்சாதனத்தால் செயல்படும் சக்கர நாற்காலி கோரியும்,அவிநாசியை சேர்ந்த எம்.செந்தில்குமார் அருந்ததியினருக்கு மடம் அமைத்து தரக் கோரியும் மனுக்கள் அளித்திருந்தனர். மனுக்களை படித்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், பல்லடம் கெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.தங்கவேல் அளித்த புகாருக்கு பதிலளித்தபோது, கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்று அரசின் தள்ளுபடி சலுகையில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளுக்கு சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனை, திருப்பூருக்கு டெக்ஸ்டைல் நூலகம் வேண்டும். அவிநாசிக்கு தொகுதிக்கு உட்பட்ட அன்னூரில் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும், போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், "தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சட்டப்பேரவை தலைவர் தனபால். அவர் நினைத்திருந்தால் அமைச்சர்களிடம் பேசி தீர்வு கண்டிருப்பார். ஆனால், அவர் செய்யவில்லை. எதுவும் செய்யாததால் தற்போது தொகுதி மாறும் முடிவில் அவர் இருப்பதாக எனக்கு தெரிகிறது. பல அமைச்சர்கள் தொகுதி மாறும் முடிவில்தான் உள்ளனர்" என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக கொறடா சக்கரபாணி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மு.பெ.சாமிநாதன், க.செல்வராஜ், இல.பத்மநாபன், ஜெயராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்