2015 வெள்ளத்தால் சேதமடைந்த தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர் மாவட்டத்தில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த, பழமையான தாமரைப்பாக்கம் அணைக்கட்டை 4 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

வடகிழக்கு பருவமழையின்போது, பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, சென்னையின் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தும் வகையிலும் சோழவரம் ஏரிக்கு அனுப்பும் வகையிலும் கடந்த 1868-ம் ஆண்டு அமைக்கப்பட்டது தாமரைப்பாக்கம் அணைக்கட்டு. அப்போது, 6 அடி உயரத்திலும், 5 மதகுகளுடனும் இந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டது.

விநாடிக்கு 1,220 கன அடி நீரை சோழவரம் ஏரிக்கு அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் உயரம் கடந்த 1996-ம் ஆண்டு, 57 இரும்பாலான ஷட்டர்கள் மூலம் 9 அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால், அணைக்கட்டின் கீழ் பகுதியில் கான்கிரீட் தளம் மற்றும் அணைக்கட்டுவின் மேல் பகுதியில் உள்ள குறுக்குச் சுவர், 8 ஷட்டர்கள் சேதமடைந்தன.

அவ்வாறு சேதமடைந்த அணைக்கட்டுப் பகுதிகளை ரூ. 4 கோடி மதிப்பில் சீரமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவின்படி, சீரமைப்பு பணிகள் தொடங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இப்பணியில், அணைக்கட்டின் கீழ் பகுதியில் உள்ள கான்கீரிட் தளம், 200 மீட்டர் நீளத்துக்கு, ஒன்றரை மீட்டர் நீளம், ஒன்றரை மீட்டர் அகலம், 90 செ.மீ., உயரம் கொண்ட கான்கிரீட் பிளாக்குகளால் சீரமைக்கப்பட உள்ளது.

அதே போல், அணைக்கட்டின் மேல் பகுதியில் 200 மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் உயரம், 45 செ.மீ. அகலம் கொண்ட குறுக்குச் சுவர் மாற்றி அமைக்கப்பட உள்ளது. சேதமடைந்த 8 ஷட்டர்களும் மறுசீரமைக்கப்பட உள்ளன. மேலும், அணைக்கட்டின் கீழ் பகுதியில், ஆற்று கரையின் இரு புறமும் கருங்கல் சாய்வு தளம் அமைக்கப்பட்டு, கரை பலப்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்