தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் விதிமுறைகளைத் திருத்தி 40 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந் ததும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி ஈரோடு கடப்பமடை பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சான்றிதழ்கள், ரேஷன்கார்டு போன்றவை லஞ்சம் இல்லாமல் பொதுமக்கள் பெறுவதற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் ஒவ்வொரு துறையிலும், பணியிடம் நிரப்புதல், பணியிட மாற்றம், ஒப்பந்தங்கள் போன்றவற்றில் ஊழல் நடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், தவறு செய்தவர்களைச் சிறையில் தள்ளுவதே முதல் வேலையாக இருக்கும். தமிழகத்தில் குவாரிகள், மணல் எடுத்தல் போன்றவற்றில் ஆளுங்கட்சியின் அராஜகம் நடக்கிறது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.
தங்களின் பிரச்சினைகளைத் திமுகவால் தீர்க்க முடியும் என்று நம்பி எங்களிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்குகின்றனர். இது முதல்வர் பழனிசாமிக்குப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தே 1100 என்ற எண்ணுக்கு புகார் அனுப்பலாம் என அறிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்த திட்டத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது?
ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக முதல்வர் கூறுகிறார். தொழில்முனைவோர் மாநாடுகள் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? தமிழக பணிகளில் வெளிமாநிலத்தவர் எப்படி சேர்ந்தனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு ஆட்சி நிறைவுறும்போது, 6 மாதத்திற்கு முன்பு பெரிய திட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கடந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி முடிவதற்குள் பணி களை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும், விதிகளைத் திருத்தி 3888 பணிகளுக்கு அவசர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந் ததும், இது போன்ற ஒப்பந்தங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும், என்றார்.
முன்னதாக, சுற்றுச்சூழல் துறையில் பணியிடங்களைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்பது போன்ற தொலைபேசி உரையாடல் ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு, இமயம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள், கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட வர்களுக்கு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். திமுக துணைப்பொதுச்செயலாளர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago