தேன்கனிக்கோட்டை அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகளை கூர் தீட்டும் போது ஏற்பட்ட குழிகள் தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

தேன்கனிக்கோட்டை அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பாறைகளில் கூர் தீட்டும் போது உருவான குழிகள் கண்டறியப் பட்டுள்ளன என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அன்பரசு, சுரேஷ் ஆகியோர், தேன்கனிக்கோட்டை வட்டம் குந்துக்கோட்டையில் மேற் கொண்ட களஆய்வில் புதிய கற்காலத்தை சேர்ந்த, கல் ஆயுதங்களைக் கூர் தீட்டும் போது ஏற்பட்ட குழிகளைக் கண்டறிந்தனர். இதனை தொல்லியல் ஆய் வாளர் சுகவனமுருகன் மீளாய்வு செய்து உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் கூறும்போது, தேன்கனிக் கோட்டையின் தெற்கே சுமார் 13 கிமீ தொலைவில் குந்துக்கோட்டை அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 4 கிமீ கிழக்கே யானைப்பள்ளம் என்று கூறப்படும் அருவியின் அருகில் பல்வேறு இடங்களில் மற்றும் வெவ்வேறு அளவுகளில் 16 குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்குழிகளின் நீளம் சுமார் 15 செமீ முதல் 20 செமீ வரையிலும், அகலம் சுமார் 5 முதல் 8 செமீ வரையிலும் ஆழம் சுமார் 2 முதல் 3 செமீ வரையிலும் காணப்படுகிறது. இவை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தில் பயன்படுத்திய கற்கருவிகளின் முனைகள் மழிந்து விட்டாலோ அல்லது உடைந்தாலோ அதனை கூர் தீட்டும் போது ஏற்படும் குழிகளாகும்.

இதுபோன்று ஏற்கெனவே, தமிழகத்தில் ஜவ்வாது மலையில் கீழனூர் கிராமத்தில் 21 குழிகளையும், பதிரி கிராமத்தில் 36 குழிகளையும் கண்டறியப் பட்டுள்ளன. குந்துக்கோட்டை மலையின் அடிவாரத்தில் புதிய கற்கால மக்களின் வாழ்விடம் அமைந்துள்ளது. இங்கு புதிய கற்காலத்தினைச் சேர்ந்த பானை ஓடுகளும், இரும்பு காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இம்மலையின் மேல் பெருங்கற் கால ஈமச் சின்னங்கள் அதிகளவில் காணப்படுகின்றன,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்