ஊத்தங்கரையில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 614 பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற 18,898 இளைஞர்களுக்கு ரூ.7.16 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர் கள் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்வு செய்து பயன்பெற வேண்டும்,’’ என்றார்.
வேலைவாய்ப்பு முகாமில் 91 நிறுவனங்கள் பங்கேற்று, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்தன. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பட்டதாரிகள், ஐடிஐ முடித்த 3,616 பணிநாடுநர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 614 பேருக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், 244 பேர் 2-ம் சுற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ் வில், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ரட்ஷிபா ஏஞ்சலா துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago