பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் கைது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் முறைகேடுகள் அம்பலம்

By செய்திப்பிரிவு

வந்தவாசி அடுத்த தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது செய்யப் பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

தி.மலை மாவட்டம் வந்த வாசியை அடுத்த சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர், தேசூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.50 ஆயிரம் பயிர்க் கடன் பெற்றுள்ளார். இந்த, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்க தேவியிடம் கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் அண்ணா துரை, ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தேவி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி, அலுவலகத் தில் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் அண்ணாதுரையிடம் ரூ.5 ஆயிரத்தை தேவி கொடுத் துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அண்ணாதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விடிய, விடிய நடத்தப்பட்ட விசாரணையில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறும்போது, “தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க 10 சதவீத கமிஷனாக லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதவர்களின் பெயர்களில் பயிர்க்கடன்வழங்கியதாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி எதிரொலியாக, கடன் பெற்றதாக பதிவு செய்தவர்களை வரவழைத்து, கையொப்பம் பெற்றுக்கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.

கடன் வழங்கப்பட்டதற்கான சங்க பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. கூட்டுறவு கடன் சங்க பதிவேட்டில், கடன் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. இது போன்ற செயல்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடை பெற்றிருக்கலாம்.

இது குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். அதன்மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தெரியவரும். அதன்படி, அடுத்தக்கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்