காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி அதிகரித்திருப்பதால் அதிக அளவில் நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவுக்குப் பிறகு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நேரடியாக நடத்தப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற இரு கூட்டங்களும் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றன. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மரம் மாசிலாமணி பேசும்போது, “ஒரு நெல் கொள்முதல் மையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் மட்டுமே பிடிக்க முடியும். உத்திரமேரூர் பகுதியில் கடந்த ஆண்டு 10 இடங்களுக்குமேல் நெல் கொள்முதல் மையங்கள் இருந்தன. தற்போது ஒன்றியத்துக்கு ஓர் இடம் என்றும் குறு வட்டத்துக்கு ஓர் இடம் என்றும் கூறுகின்றனர். தற்போது நெல் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டுக்கு குறைவில்லாத வகையில் நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும்.

நெல் நடவு செய்யும் விவசாயிகள் பலர், பயிர்களில் களைகள் வளர்வதைத் தடுக்க களைக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். வீரியம் அதிகம் உள்ள மருந்தை பயன்படுத்துவதால் மண் மலட்டுத் தன்மை அடைகிறது. களைக் கொல்லிகளாக பயன்படுத்தப்படும் மருந்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.

விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய உயிர் உரங்கள் அவசியம். உயிர் உரங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உத்திரமேரூர் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தில் புதைக்கப்படும் எரிவாயு குழாய்க்காக மாதந்தோறும் வாடகை அளிக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு பேசும்போது, பயிர்க் கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும், “விவசாயிகளின் நீண்ட காலக் கடன், மத்திய காலக் கடனாக மாற்றப்பட்டுள்ளது. அதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகளிடம் நெல் வாங்குவதைத் தடுக்க விவசாயிகள், வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் பாலாற்றில் வெங்குடி, வெங்கடாபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கச்சேரி தடுப்பணை சேதமடைந்துள்ளது. அதை சரி செய்து அதன் உயரத்தை உயர்த்த வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் கல்குவாரிகளைத் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் பல்வேறு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ், இழப்பீடு கிடைக்காதது தொடர்பாகப் பேசினர். விவசாயிகளின் தீர்க்க முடிந்த முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உறுதி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நடராஜகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE