வாணிஒட்டு திட்டத்தை தொடங்க விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

வாணிஒட்டு திட்டத்தை தொடங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு அல்லது கொலுசுமடுவு என்னும் இடத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையிலிருந்து தருமபுரி மாவட்டம் தகடூர் வரை கால்வாய் அமைத்து பாசனம் மேற்கொள்ளப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் காலப்போக்கில் தடுப்பணை அழிந்துவிட்டது. தற்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த இடத்தில் 100 அடி உயரத்துக்கு அணை கட்டி மின்சாரம் எடுத்து அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கினால் 250 ஏரிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இத்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டங்களால், ரூ.778 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்மொழிவு அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான அரசாணையை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைக்க வேண்டும்.

இதேபோல், ஏலகிரி மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சிங்காரப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இங்கு ஒரு அணை கட்டி பாம்பாற்றுடன் இணைத்து புதிய கால்வாய்கள் அமைத்து விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து கொடுக்க ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்