அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு சங்கம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள, விழிப்புணர்வு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என ஆர்டிஓ வெங்கடேசன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சாலை போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பி சரவணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் பேசும்போது, ‘‘பெண்கள் வாகனங்களை ஓட்டும் போதும், அமர்ந்து செல்லும் போதும் துப்பட்டா மற்றும் புடவை முந்தானையை பாதுகாப்பாக பிடித்தபடி பயணம் செய்ய வேண்டும். இக்கல்லூரியில் விழிப்புணர்வு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு அலுவலர் இங்கு வந்து மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கம், விழிப்புணர்வு ஏற்படுத்துவார்,’’ என்றார்.

பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி பேசுகையில், ‘‘பொதுமக்கள் சாலையில் பல்வேறு கனவுகளுடன் செல்கின்றனர். நாம் மற்றவர்களின் கனவுகளை சிதைக்கக் கூடாது. இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 4 பேர் விபத்தில் இறக்கின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நடந்து செல்பவர்களில் மட்டும் 17 சதவீதம் பேர் விபத்தில் இறக்கின்றனர். இரவில் வாகனப் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும். பெண்கள் காவலன் செயலியைப் பயன்படுத்த வேண்டும்,’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், 108 ஆம்புலன்ஸில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச்செழியன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ராமன், டைட்டஸ் உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்