பயிர்க்கடனை செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடனைச் செலுத்தியவர்களுக்கு கடன் தொகையைத் திரும்ப வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிருஷ் ணகிரி மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு விவசாயம் மேற்கொள்ளும் போது, மழை, வெள்ளத்தால் சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பயிர் அழிந்துவிடுகிறது.

இதனால் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். தொடர்புடைய வங்கி அலுவலர்கள் கடனை திரும்பச் செலுத்துமாறு நிர்ப்பந்தம் செய்த காரணத்தால் விவசாயிகள் பலர் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 31.01.2021-ம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. 30.01.2021-க்கு முன்பே பெற்ற கடன்களை முழுமையாக திருப்பி செலுத்தி மீண்டும் கடன் பெறாத விவசாயிகள் பலர் உள்ளனர்.

அவ்வாறு கடன்களை செலுத்தியவர்களுக்கு தொகையை திரும்ப வழங்க வேண்டும். கடனை திரும்ப செலுத்திய சிலர், புதிய கடனுக்காக ஜனவரி 31-ம் தேதிக்கு முன்பே விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கான கடன் தொகை, பிப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையும் கணக்கில் கொண்டு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானம் வைத்து விவசாய கடன் பெற்றுள்ளவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்