செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் நிலைய எல்லைகள் மாற்றியமைப்பு

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், காவல் துறையின் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறும் பல்வேறு காவல் நிலையங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஆணையின்படி காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு மாவட்ட காவல் நிலையம் மற்றும் காவல் நிலைய எல்லைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சாலவாக்கம், உத்திரமேரூர் காவல் நிலையம், பெருநகர் காவல் நிலையம் ஆகிய 3 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை எல்லைக்கு மாற்றப்பட்டன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெய்யூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், பிலாபூர், சித்தண்டிமண்டபம், நெல்லி, பள்ளியகரம், மங்கலம், நெல்வாய், குமாரவாடி, கருணாகரச்சேரி, சாலவாக்கம் கூட்ரோடு, புக்கதுறை, நடராஜபுரம் மற்றும் கொடிதண்டலம் ஆகிய 15 கிராமங்கள் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், பாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய சீவரம், சங்கராபுரம், வரதாபுரம், லிங்காபுரம், தொள்ளாழி, தொண்டான்குளம், உள்ளாவூர் மற்றும் கொசப்பேட்டை ஆகிய 8 கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடம்பாக்கம், குத்தனூர், ஆதனூர் மற்றும் கொருக்கந்தாங்கல் ஆகிய 4 கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே கிராம மக்கள் தங்கள் பகுதி காவல் நிலையம் எது என்பதை தெரிந்துக் கொண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குச் சென்று தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இணைக்கப்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி தெரியாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் புகாரின் தன்மையைப் பொறுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்