திருப்பூர் மாநகரில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ (புன்னகையைத் தேடி) திட்டத்தின் கீழ் காணாமல் போன குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் என 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறை தலைமை உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் புன்னகையைத்தேடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் காணாமல் போன சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டுபிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, திருப்பூர் மாநகரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சுரேஷ்குமார் கண்காணிப்பில், கூடுதல் துணை ஆணையர் மோகன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) மேற்பார்வையில் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பதுருன்னிஷா பேகம் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில், 20 குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுக்கும் சிறுவர், சிறுமிகள், காணாமல் போன 12 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலமாக உரிய முறைப்படி பெற்றோரிடமும், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களிலும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை கண்டுபிடிக்க செயலாற்றிய தனிப்படை போலீஸாருக்கு, காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago