காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1,300-ஐ வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்க வேண்டும், மாவட்டங்களில் அதிக அளவு காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று முதல் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை பலர் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் த.ரமேஷ், செயலர் கே.ராஜ்குமார், பொருளர் தயாளன் ஆகியோர் தலைமையில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு அலுவலகங்களில் மிகக் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர்.
இதேபோல் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை பலர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த் துறையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் 250 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago