பர்கூர் அருகே எலத்தகிரியில் எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள் வெற்றி பெற்ற 40 காளைகளுக்கு ரூ.4 லட்சம் பரிசு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி யில் நடந்த எருது விடும் விழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த 40 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி கிராமத்தில் நேற்று 25-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. எலத்தகிரி பங்கு தந்தை மைக்கேல் ஆன்ட்ரூஸ், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். எருது விடும் விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் இலக்கை ஓடிக் கடந்தது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 40 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் 40 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவைக் காண எலத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் வந்திருந்தனர். விழாவின் போது காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். கந்திகுப்பம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்