மின் இணைப்பு கிடைக்காததால் வீணாகி வரும் நூறு நாள் திட்ட திறந்தவெளி கிணறுகள் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

விவசாய மின் இணைப்புக் கிடைக்காததால் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தோண்டிய திறந்தவெளிக் கிணறுகள் வீணாகின்றன. மேலும், விளைநிலங்கள் தரிசாகக் கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயப் பயன்பாட்டுக்காக நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் தனி நபர் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. இதற்காக தற்போது ரூ.7.40 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டுவோருக்கு விவசாய மின் இணைப்புப் பெற்றுத் தரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதனால் 2 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் வைத்திருந்த விவசாயிகள் இத்திட்டத்தில் திறந்தவெளிக் கிணறுகளைத் தோண்டினர்.

சிவகங்கை மாவட்டத்தில் 2016 முதல் 2021 வரை 60-க்கும் மேற்பட்டோர் திறந்தவெளி கிணறுகளைத் தோண்டியுள்ளனர். ஆனால் ஒருவருக்குக்கூட இதுவரை விவசாய மின் இணைப்பு வழங்கவில்லை. மின் இணைப்புக் கிடைக்காததால் பலரும் விவசாயம் செய்யாமல் விளைநிலங்களைத் தரிசாக விட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் தக்கலில் ரூ.2.50 லட்சம் செலுத்தி மின் இணைப்புப் பெற்றுள்ளனர். இதுகுறித்து ராஜகம்பீரம் விவசாயி காசிராஜன் கூறியதாவது:

எம்பிஏ பட்டதாரியான நான் விவசாயத்தின் மீதான ஆர்வத்தில் 2016-17-ம் ஆண்டு நூறுநாள் வேலைத் திட்டத்தில் திறந்தவெளிக் கிணறு தோண்டினேன். விவசாய மின் இணைப்புக் கொடுக்க ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரும் எங்களுக்குப் பரிந்துரைத்தார். ஆனால், இதுவரை மின் இணைப்புக் கிடைக்கவில்லை. இதனால் 13 ஏக்கரிலும் விவசாயம் செய்யாமல் தரிசாக விட்டுவிட்டேன். விரைந்து மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் தோண்டிய திறந்தவெளிக் கிணறுகளுக்கு விவசாய மின் இணைப்புக் கொடுப்பது தொடர்பாக எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE