தஞ்சாவூர் கோட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்-அலுவலர்கள் வாக்குவாதம்

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைக் கோட்டாட்சியர் எம்.வேலுமணி தொடங்கி வைத்துவிட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றார்.

இதைத்தொடர்ந்து இக்கூட்டத்தைக் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் நடத்தினார்.

அப்போது, எங்களுக்குக் கூட்டுறவு சங்கப் பயிர்க் கடன் கிடைக்கவில்லை. இதேபோல, பல விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவில்லை. அதனால், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் பலனில்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், எங்களது ஊரிலுள்ள விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க் கடன் வழங்கப்படவில்லை எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு சங்கச் சார்பதிவாளர் ராமச்சந்திரன், வரகூரில் கடந்த காலங்களில் பயிர்க் கடன் பெற்ற 60 விவசாயிகளில் 50 பேர் திரும்பச் செலுத்தவில்லை.

கடன் நிலுவை இருப்பதால், புதிய கடன் வழங்கவில்லை. ரவிச்சந்தரின் தந்தை பெயரிலும் கடன் பெறப்பட்டு, திரும்பச் செலுத்தப்படாமல் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து, ரவிச்சந்தர் பேசும்போது, ‘‘கூட்டுறவு சங்கத்தில் நானும், எனது தந்தையும் கடன் வாங்காத நிலையில், கடன் வாங்கித் திரும்பச் செலுத்தவில்லை என பொய்யான தகவலைக் கூறி, அவமானப்படுத்திய சார்பதிவாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்றார்.

இதே கோரிக்கையை தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட விவசாயிகளும் வலியுறுத்தினர். இதனால், அரசு அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பினரையும் மற்ற அலுவலர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர், கோட்டாட்சியர் அலுவலக வாயிலில், அலுவலர்களைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து என்.வி.கண்ணன் கூறும்போது, ‘‘ரவிச்சந்தர் விடுத்த கோரிக்கைக்கு கூட்டுறவு சங்க அலுவலர் தவறான தகவலைக் கூறி அவமானப்படுத்தியுள்ளார்.

இதற்கான விளக்கத்தை கூறி, வரும் திங்கள்கிழமைக்குள் அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE