கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் 250-க்கும் அதிக மான காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.

கிருஷ்ணகிரி பழையபேட்டை யில் மீன் மார்க்கெட் அருகில் இருந்து காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் செல்லும் சாலையில் எருதுவிடும் விழா நடத்தப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மட்டுமின்றி ஆந்திராவில் இருந்தும் காளைகளை வாகனங்கள் மூலம் கொண்டு வந்தனர்.

குறிப்பிட்ட தூரத்தை குறைந்த விநாடிகளில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.1,25,555-ம், இரண்டாம் பரிசாக ரூ.1,05,555-ம், மூன்றாம் பரிசாக ரூ.75,555-ம், நான்காம் பரிசாக ரூ.65,555-ம், 5-ம் பரிசாக ரூ.55,555-ம் என மொத்தம் 33 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு விழாக்குழு தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்பி அசோக்குமார் எருதுவிடும் விழாவை தொடங்கிவைத்தார். இவ்விழாவினை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி நகர போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா குழுத் தலைவர் இறப்பு

கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் திருவிழாவின் விழா குழு தலைவராக இருந்தவர் பால்ராஜ். இவர், அதிமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தார். நேற்று காலை விழா தொடங்கிய பிறகு விழா மேடையில் இருந்து கீழே இறங்கி நடந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்