திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கூட்டரங்கம் திறப்பு அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கூட்டரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு புதிய கூட்டரங்கை திறந்து வைத்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட் டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்ய தயாராக உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறவும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கூட்டரங்கம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு இன்று (நேற்று) கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை முன்நிறுத்தி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத் துக்கு தமிழக அரசு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதி களையும் ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை மாவட்ட மாக திகழ முயற்சி எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 3.72 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினசரி சுமார் 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டாலும் தொற்று பரவல் குறைவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். இதை யடுத்து, 5 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங் கினார்.

பின்னர், 32-வது சாலை பாதுகாப்பு விழாவையொட்டி விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரச்சார பேருந்து மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் நடராஜன் (வேலூர்), மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்