தி.மலை மாவட்டம் வந்தவாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

வந்தவாசியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் ஆரணி நெடுஞ்சாலை, பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை, அச்சிறுப்பாக்கம் சாலை மற்றும் வட்டாட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 14-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டு காலக்கெடு நிர்ணயித்தது. அதன்படி, ஒரு சில வணிகர்கள், தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை யினர் நேற்று தொடங்கினர். ‘பொக்லைன்' இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு, வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் , அவர்கள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு வந்த எம்எல்ஏ அம்பேத்குமார், ஆக்கிரமிப்புகளை, வணிகர்கள் தாங்களா கவே அகற்றி வரும் நிலையில், பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

மேலும், வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் ஆகியோரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வணிகர்களுக்கு ஒரு நாள் கால அவகாசம் வழங்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்