டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.
இதுகுறித்து திருப்பூர், கோவைமாவட்ட பொக்லைன் உரிமையாளர் சங்கத் தலைவர் கனகராஜ் பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:டீசல், உதிரி பாகங்கள் மற்றும் புதிய வாகனங்களின் விலை உயர்வு, காப்பீடு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பொக்லைன் இயந்திரத்தால் மேற்கொள்ளப்படும் தொழில் நஷ்டமடைந்து வருகிறது. புதிய வாகனங்களுடன், உதிரி பாகங்களின் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ரூ.27 லட்சமாக இருந்த பொக்லைன் வாகனம் தற்போது ரூ.28 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. காப்பீடு 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை இருந்த சாலை வரி ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மணிக்கு ரூ.900 வாடகை பெற்று வரும் நிலையில் மேற்கூறிய காரணங்களால் வாடகையை ரூ.1,200-ஆக உயர்த்த வேண்டும். டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்து 500-க்கும் அதிகமான பொக்லைன்கள் இயங்கி வருகின்றன. கோரிக்கைகளை வலியுறுத்தி, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி பகுதிகளில் இன்று(நேற்று) தொடங்கிய வேலைநிறுத்தத்தில், 250-க்கும் அதிகமான பொக்லைன் வாகன உரிமையாளர்கள்பங்கேற்றுள்ளனர். 15-ம் தேதி (இன்று) பல்லடம், பொள்ளாச்சி,உடுமலை,சூலூர் பகுதிகளிலும்வேலைநிறுத்தம் தொடங்கும். 3 நாட்களுக்கு இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago