கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கருவாடு இறக்குமதி செய்ய இலங்கை தடைவிதித்ததைக் கண்டித்து ராமேசுவரம் ஏஐடியூசி மீனவத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலோர மாவட்டங்களில் இருந்து மீனவர்களால் பிடித்து வரப்படும் சூரை மீன்களில் சுமார் 17 சதவீதம் பதப்படுத்தப்பட்டு உயர்ரகக் கருவாடாக பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவிலிருந்து வரும் மீன்கள் மற்றும் கருவாடுக்கு இலங்கை தடை விதித்துள்ளது.

இதனால் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள கருவாடு தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளது. ஆனால் மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவாடு ஏற்றுமதித் தடையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக இலங்கையுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேசுவரம் பேருந்துநிலையம் அருகே தொழிலாளர்கள் கருவாடுகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா துணைத் தலைவர் எம்.பிச்சை தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.முருகானந்தம் மாநில செயலாளர் சி.ஆர். செந்தில்வேல், மாநில குழு உறுப்பினர் வடகொரியா, தாலுகா நிர்வாகிகள் ஜீவானந்தம், மோகன்தாஸ், தனவேல், ஜோதி பாசு, மீனவர் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பர்வதமுத்து, தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE