கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட விவசாயத்துக்கு பயனளிக்கும் எண்ணேகொல் கால்வாய் நீட்டிப்பு திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டன.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல் புதூர் பகுதியில் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து வலது மற்றும் இடது கால்வாய்களை நீட்டிப்பு செய்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட பாசன வசதிக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்துக்கு நேற்று முன் தினம் தமிழக முதல்வர் காணொலி முறையில் அடிக்கல் நாட்டினார்.
இந்த பணிக்கான கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் நில எடுப்புப் பணிக்காக கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் கற்பகவள்ளி நியமிக்கப்பட்டார். நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டு முதல்நிலை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
திட்ட நில எடுப்பு பணிகளுக்கு நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க ரூ.72 கோடி தருமபுரி, கிருஷ்ணகிரி கோட்டாட்சியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை தமிழக முதல்வர் காணொலி முறையில் தொடங்கி வைத்த நாளில் எண்ணே கொல்புதூர் அணைக்கட்டின் அருகில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. கோட்டாட்சியர் கற்பகவள்ளி, ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago