பிரதமரின் சென்னை வருகை அரசியல் நோக்கம் கொண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் சென்னை வருகை, முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது என்று தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் குற்றம் சாட்டியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் சம்சுல் லுகா தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மய மாக்கக் கூடாது. குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் இ.முகம்மது, மாநிலப் பொருளாளர் ஏ.கே.அப்துல் ரகீம், மாநிலத் துணைத் தலைவர் பா.அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இ.முகம்மது கூறியது: நீட் தேர்வு ரத்து, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி, ஜிஎஸ்டி நிலுவை உட்பட தமிழகத்தின் பல் வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை பிரதமர் மோடி செவிசாய்க்க வில்லை. இந்த நிலையில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க தமிழகத்துக்கு வந்துள்ளார். பிரதமரின் இந்தச் சென்னை பயணம் முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது.

குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகப் பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி கல்யாணராமன் வௌியே வந்தால், மீண்டும் மதக்கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்படுவார். எனவே, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

பொதுவாக, தேர்தலில் எந்த வொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவான அல்லது எதிரான நிலைப் பாட்டை வெளிப்படையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக் காது. அதேவேளையில், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும் யார் வரக்கூடாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர். அதற்கேற்ப வரும் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்